search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பிகே கட்டுமான நிறுவனம்"

    அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை உள்ளிட்ட 15 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. #SPKgroup #ITRaid
    சென்னை:

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர்.

    சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


    மேலும் செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதையடுத்து செய்யாத்துரை மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி, செய்யாத்துரை உளிட்ட 15 பேருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியது. 15 பேரும் இன்று மாலை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    வருமான வரித்துறை சோதனையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ilaganesan #incometaxraid

    சேலம்:

    சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.

    இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

    சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid

    காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

    வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.

    இந்த பிரச்சனையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.


    முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையெல்லாம் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் போல அல்லாமல் காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நீர்த்து போகாமல் முழுமையாக விசாரணை நடைப்பெற வேண்டும்.

    தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.

    தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.

    நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.

    இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

    தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை குபேரனாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழமுடி மன்னார்கோட்டையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் செய்யாத்துரை.

    இவர் கடந்த 1980-ம் ஆண்டில் தனது பூர்வீக கிராமத்தை விட்டு அருப்புக்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்கு பாலையம்பட்டி பகுதியில் குடியேறிய செய்யாத்துரை ஆரம்பத்தில் ஆடுகளை வாங்கி இறைச்சி கடைகளுக்கு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    மொத்தமாக ஆட்டுச் சந்தையில் ஆடுகளை கொள்முதல் செய்து கடைகளுக்கு கொடுத்த செய்யாத் துரைக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது தொழிலை மாற்ற யோசித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இருந்த அரசியல் பிரமுகர்களின் தொடர்பு மூலம் சிறு, சிறு ரோடுகள், பாலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அவருடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தார் செய்யாத்துரை. கல்குறிச்சி, கிருஷ்ணாபுரம் பகுதியில் நூற்பு ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வசதி ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தனது பங்குதாரர்களை கழற்றி விட்ட செய்யாத்துரை எஸ்.பி.கே. நிறுவனம் என்ற பெயரில் ஒப்பந்த பணிகளை எடுக்கத் தொடங்கினார்.

    தனது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன் ஆகியோர் மூலம் சாலைப் பணிகளை செய்தார்.

    கோடிக்கணக்கில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்து பணி செய்த செய்யாத்துரைக்கு அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்று நட்பு வட்டாரங்கள் விரிய ஆரம்பித்தன.

    இதனால் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த செய்யாத்துரைக்கு தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள டெண்டர்கள் கிடைத்தன.

    இதனால் அரசு ஒப்பந்தப் பணிகளில் அசைக்க முடியாத ஜாம்பவானாக செய்யாத்துரை வலம் வந்தார்.

    மதுரையில் நடைபெற்று வரும் ரூ.200 கோடி மதிப்பிலான ரிங்ரோடு விரிவாக்கப்பணி, ரூ.56 கோடி மதிப்பிலான உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரூ. 1,000 கோடிக்கு மேல் ஒப்பந்த பணிகள் செய்யாத் துரையின் நிறுவனத்திற்கு கிடைத்தது.

    இந்த நிறுவனத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரின் வாரிசுகளும் பங்கு தாரர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தனது தொழில் விருத்தியடைவதற்காக தனது மகன் நாகராஜை சென்னையிலும், ஈஸ்வரனை மதுரையிலும் தங்க வைத்தார். மற்ற மகன்கள் அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஒப்பந்தப் பணிகளை கவனித்து வந்தனர்.

    பலகோடி டெண்டர்களை எடுத்து பணி செய்தாலும் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடித்துக் கொடுப்பதில் கை தேர்ந்தவராக செய்யாத்துரை செயல்பட்டதால் அமைச்சர்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நட்பு கரமும் செய்யாத்துரைக்கு அதிகமாகவே கிடைத்தது. இதற்காக பல கோடிகளும் கைமாறியது.

    இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட அதிகாரத்திலும் செய்யாத்துரை தலையிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தினார்.

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் கொடி கட்டி பறந்த செய்யாத்துரை இப்போது வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். அவரது நிறுவனம் மற்றும் வீடுகள், வங்கி கணக்குகள் அங்குலம், அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகளால் அலசி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரையின் இந்த திடீர் வளர்ச்சி வந்தது எப்படி? என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    செய்யாத்துரையின் வீடுகள் மற்றும் கார்களில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், பணக்குவியல்கள், சொத்து ஆவணங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளன.

    இந்த சொத்துக்கள், பணக்குவியல்கள் எப்படி செய்யாத்துரைக்கு கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை சில ஆண்டுகளில் ‘குபேரனாக’ உயர்ந்தது குறித்தும், அவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் வட்டம் ஆகியவையும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

    எனவே செய்யாத்துரை மட்டுமின்றி அரசியல் புள்ளிகள், அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
    அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. காண்டிராக்டர் செய்யாத்துரையிடம் கணக்கில் காட்டப்படாத தங்கம்-ரொக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #ITRaid #SPK
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 65). இவர் எஸ்.பி.கே. நிறுவனம் மூலம் நெடுஞ்சாலைத்துறை பணிகளை செய்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    செய்யாத்துரையின் அலுவலகம் மட்டுமின்றி அவரது மகன்கள் கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் ஊழியர்களது வீடுகள், சார்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு ஆய்வு நடத்தினர்.



    இந்த சோதனையின்போது வீடுகள் மற்றும் கார்களில் பதுக்கப்பட்ட ரூ. 174 கோடி ரொக்கம், 106 கிலோ தங்க கட்டிகள் ஆகியவை சிக்கின. மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை கே.கே.நகரில் உள்ள செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நட்சத்திர விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரனின் வீட்டில் நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

    செய்யாத்துரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார்கோட்டையில் அவரது பூர்வீக வீடு மற்றும் தோட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டு சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 இடங்களில் சுவர்களை இடித்து இந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

    கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியுள்ள தங்க கட்டிகள், பணக்குவியல்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் அருப்புக்கோட்டையில் 3-வது நாளாக இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையும் நீடித்து வருகிறது.

    காண்டிராக்டர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கணக்கில் காட்டப்படாத தங்கம்-ரொக்கம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    செய்யாத்துரை 100-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலம் பல கோடி பணத்தை முக்கிய புள்ளிகளுக்கு கைமாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், முக்கிய நபர்கள் குறித்தும் செய்யாத்துரையிடம் விசாரணை நடந்து வருகிறது.

    அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் நிலைகுலைந்த செய்யாத்துரை விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், கேள்விகளுக்கு உரிய பதிலை தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை, மதுரை ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் செய்யாத்துரையிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

    செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் 15-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    வங்கிகள் மூலம் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர்.

    மதுரை நட்சத்திர விடுதியில் தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் அடிக்கடி வந்து சென்ற விவரம் குறித்தும் வருமான வரித்துறையினர், செய்யாத்துரையிடம் துருவித்துருவி கேள்விகளை கேட்டனர்.

    செய்யாத்துரையுடன் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த நடவடிக்கை அரசியல் புள்ளிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. #ITRaid #SPK


    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

    தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன.

    இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர் செய்யாத்துரையின் வீடுகள்.

    செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் போலீசார் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட னர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #SPK
    ×